ஆக்கங்கள்/கட்டுரைகள் பகுதி

Monday, April 26, 2010

அறிவை மட்டும் சுமக்கட்டும்

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது முதல் வகுப்பு தொடங்கி 6-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகச் சுமை குறைந்திருக்கும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. குழந்தைகளின் புத்தகச் சுமை எந்த அளவுக்குக் குறைகிறதோ அந்த அளவுக்குத் தமிழக அரசை அதிகம் பாராட்டலாம்.
பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் மாணவர்களின் பெரும்சுமையாகவே மாறிவிட்டன. மூட்டை சுமப்பதுபோல சுமக்க வேண்டியிருக்கிறது. பல குழந்தைகள் இவற்றைச் சுமக்கவும் சக்தியில்லாமல் கூன் விழத் தூக்கிச் செல்கின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பள்ளிப் பாடப் புத்தகங்கள் தரமான தாள்களில் உருவாக்கப்படுவதில்லை. இரண்டாவதாக எல்லாப் புத்தகங்களையும் பள்ளிக்கு நாள்தோறும் கொண்டுவர வேண்டும் என்கிற கட்டாயம்.
தற்போது, சமச்சீர் கல்விக்காகத் தயாரிக்கப்படும் பாடப்புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் தாள்களில் அச்சிடப்படவுள்ளன என்பதும், இவை மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு மலிவு விலையிலும், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும் வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்க விஷயம்தான்.
நோட்டுப் புத்தகங்களைக்கூட குறிப்புத்தாள்களாக அச்சிட்டு வழங்க கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது மாணவர்கள் தினமும் நோட்டுப் புத்தகங்களை எடுத்துச் செல்லாமல், பாடங்களை குறிப்புத்தாள்களில் மட்டும் எழுதிக்கொண்டுவந்து, வீட்டில் அவற்றை தனித்தனி கோப்புகளில் சேகரித்து வைக்கலாம். இந்த நடைமுறையால் நோட்டுப் புத்தகங்கள் சுமை, வெறும் பத்து பதினைந்து குறிப்புத் தாள்களாகக் குறைந்துபோகும். புத்தகச் சுமையில் பாதி குறைந்துவிடும். நோட்டுப் புத்தக விற்பனை மூலமும் லாபம் பார்க்கும் பள்ளிகளுக்கு வேண்டுமானால் வருத்தமாக இருக்கக்கூடும். ஆனால் இந்த நடைமுறை அனைவருக்கும் ஏற்புடையதே.
இருப்பினும், நம் கல்விக்கூடங்களை காலத்துக்கேற்ப சற்று மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புத்தகச் சுமை குறைப்பை மேலும் அறிவுப்பூர்வமாகச் செய்வது, தமிழக அரசுக்கு பாடப்புத்தகம் அச்சடிக்கும் நிதிச்சுமையையும் குறைக்க உதவும்.
லட்சக்கணக்கான புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக அல்லது மலிவு விலையில் வழங்கினாலும், இந்தப் புத்தகத்தின் விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு விலையில் "நோட்ஸ்' விற்பனை அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது தோன்றும் முதல் கேள்வி-அப்படியானால் எதற்காக இந்தப் பாடப்புத்தகங்கள் என்பதுதான். ஆசிரியர்களே இதில் எந்த "நோட்ஸ்' நல்லது என்று பரிந்துரைக்கும் அவல நிலையும் உள்ளது.
இந்த "நோட்ஸ்' கலாசாரம் தமிழக மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்ல, ஆசிரியர்களின் திறனையும் மட்டுப்படுத்தி, அவர்களையும் செயல்பட விடாமல் தடுத்துவிடுகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று கல்வித் துறை விரும்பினால், புத்தகச் சுமையைக் குறைப்பதுடன், பள்ளிகளில் புதிய கல்விச் சூழலை அறிமுகம் செய்வதன் மூலம் இந்த "நோட்ஸ்' கலாசாரத்துக்கும் சேர்த்து முடிவு கட்டலாம்.
இந்தப் புத்தகங்களை பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்கள் வைத்துக்கொள்ளவும் அல்லது நூலகர் இருந்தால், அந்தந்தப் பாடவேளையின்போது அப்புத்தகங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்வதுமான நடைமுறையை ஏற்படுத்தினால், மாணவர்கள் புத்தகங்களைச் சுமக்க வேண்டிய அவசியமே இருக்காது. மேலும், ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்துக்கும் (தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ்-2) வினா-விடை தொகுப்பு நூலை அரசு அச்சிட்டு, அதனை பள்ளி நூலகத்தில் கிடைக்கச் செய்தால், "நோட்ஸ்' வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் மாணவர்கள் அதைப் பள்ளியிலேயே தாமாகவோ, ஆசிரியர் உதவியுடனோ குறிப்பெடுத்து படிக்க வேண்டிய பழக்கத்துக்கு ஆளாவார்கள். இதற்காகக் குறிப்பெடுக்கும் நேரம் என தனியாக ஒரு நேரத்தை ஒவ்வொரு வகுப்புக்கும் அறிமுகம் செய்யலாம்.
இவை யாவும் கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டியவை, இதனை 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையுள்ள மாணவர்களுக்கு அமல்படுத்தினால் சரிப்பட்டு வருமா என்ற அச்சம் தேவையற்றது. இன்றைய குழந்தைகள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மூன்று வயது குழந்தையும் செல்போனை மிக எளிதாகக் கையாள்கிறது. அவர்களால் இந்த எளிய நடைமுறையைப் புரிந்துகொள்ளவும், அறிவைத் தேடும் பழக்கமும் தானாக அமையும்.
இத்தகைய மாற்றத்தை நம் பள்ளிகளில் கொண்டு வர வேண்டுமானால், அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இருந்தால் போதுமானது. புத்தகங்களைப் பராமரிக்க நல்ல தளவாடங்களை வாங்கிக் கொடுப்பது மட்டுமே அரசு செய்ய வேண்டியது. பள்ளி மாணவர்கள் குறிப்பெடுப்பதற்காகப் பள்ளியில் கூடுதல்நேரம் ஆசிரியர்கள் இருக்க வேண்டிய அவசியம் நேரும் என்பது உண்மையே. ஆனால் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட எந்தவொரு ஆசிரியரும் இத்தகைய சூழலை ஆர்வத்துடன் எதிர்கொள்ளவே விரும்புவார், தட்டிக்கழிக்க மாட்டார். பணிச்சுமையாகக் கருத மாட்டார்.
மேலும், செயல்வழிக் கல்வி, புத்தகச் சுமை குறைப்பு, பாடத்திட்ட சுமை குறைப்பு எனும் அதேவேளையில், அறிவுச் சுமையை அரசு குறைத்து விடக்கூடாது.
கணிப்பொறியின் நினைவுத்திறன் அதன் தன்மைக்கு ஏற்ப மாறும். அளவுக்கு அதிகமாக ஒரு சிறு தகவலைக்கூட அதனால் சேமிக்க முடியாது. ஆனால் மனித மூளை அப்படியல்ல. அது அளவுகள் கடந்த கணினி. அதன் நினைவுத்திறன் அளவுகளில் அடங்காதது. ஒவ்வொரு குழந்தையின் மூளையும் எத்தனை தகவல்களையும் உள்வாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டது. குழந்தையின் ஆர்வத்துக்கு ஏற்ப இது கூடுமே தவிர குறையாது. ஆகையால், மனப்பாடப் பகுதிகளை அதிகரிக்கலாமே தவிர குறைப்பது கூடாது.
ஏனென்றால், மனப்பாடப் பயிற்சி இல்லாமல் வளரும் குழந்தைகள், முதுமையில் எந்த சிறு விஷயத்தையும்கூட நினைவில் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றன. இப்போது அமெரிக்காவின் மாபெரும் பிரச்னை இதுதான். முதியோரின் மனதில் நினைவாற்றல் என்பது சிறிதுகூட இல்லை. இப்போதுதான் தங்கள் பிழையை அமெரிக்கக் கல்வியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
செல்பேசியிலேயே கால்குலேட்டர் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் கணக்கு வாய்பாடுகள் தேவையா, கொஞ்சம் பாடல்களை மனப்பாடம் செய்தால் போதாதா என்ற எண்ணத்தைக் கைவிட்டு, குழந்தைகளுக்கு அதிக அளவில் மனப்பாடப் பகுதிகளை வைத்திருப்பதும், கணித வாய்பாடுகள், இலக்கியப் பகுதிகளை மனப்பாடம் செய்வதை ஊக்குவிப்பதும் இக்குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நன்மை சேர்க்கும்.

No comments:

Post a Comment