ஆக்கங்கள்/கட்டுரைகள் பகுதி

Tuesday, April 27, 2010

பெருகட்டும் அன்பு வெள்ளம்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வழியில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது அண்ணலார் தமது தேவைகளை நிறைவேற்றச் சென்றுவிட்டார்கள்.
நபித்தோழர்கள் அமர்ந்திருந்த இடத்தில் எறும்புப் புற்றுகள் நிறைய இருந்தன. ஏராளமான எறும்புகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... நபித்தோழர்களில் சிலர் அந்த எறும்புப் புற்றுகளை எரித்துவிட்டார்கள். சின்னஞ்சிறு உயிர்கள் கருகி மடிந்தன.திரும்பி வந்த நபிகள் நாயகம் அவர்கள் எரிக்கப்பட்டிருந்த எறும்புப் புற்றுகளைப் பார்த்து வேதனையும் கவலையும் அடைந்தவராய், “இந்த எறும்புப் புற்றுகளை எரித்தவர்கள் யார்?” என்று கேட்டார். “நாங்கள்தாம் எரித்தோம்” என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.
“நெருப்பினால் யாரையும், எந்த உயிரையும்
தண்டிக்காதீர்கள். நெருப்பினால் வேதனையளிக்கும் (நரக) தண் டனையைத் தருவது அதிபதியான இறைவனின் உரிமையாகும்.” (மனிதர்களுக்கு அந்த உரிமை இல்லை.) “நெருப்பினால் கொலை செய்யாதீர்கள். நெருப்பால் தண்டிக்கும் அதிகாரம் இறைவனுக்கே உரியதாகும்” என்று அறிவித்தார். (ஆதார நூல்: புகாரி) ஆனால் இன்று நடப்பது என்ன?
சாதிச் சண்டைகள், கலவரங்கள், குடும்பத் தகராறுகள்
ஆகியவற்றின்போது படைப்புகளிலேயே உயர்ந்த படைப்பான மனித உயிர்களைத் தீயால் எரிப்பது என்ன நியாயம்? இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் நாம் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கிறோம் எனில், நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை உ ண்மையானது எனில், பிறர்க்குத் தீங்கு இழைக்கும் நோக்கத்துடன் தீக்குச்சியைத் தீண்டுவதற்குக் கூட நமக்கு உரிமை இல்லை. வெறுப்பும் வேண்டாம்; நெருப்பும் வேண்டாம்.
மனித குலத்திற்கு இன்று தேவை அன்பு. மதமாச்சரியங்களைக் கடந்து நம் உள்ளங்களில் ஆன்மிக அன்பு வெள்ளம் பெருகட்டும்..! வெறுப்பு எனும் நெருப்பை அந்த அன்பு வெள்ளம் அடித்துச் செல்லட்டும்

No comments:

Post a Comment