ஆக்கங்கள்/கட்டுரைகள் பகுதி

Wednesday, June 2, 2010

பொறியியல் படிப்பு இலவசம்:

முஸ்லிம் மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்வார்களா?


பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.

இதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.

பொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீட்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.

அதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.

ஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீடகள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.

இப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.

ஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா? இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.

பிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.

அடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ம் தேதியன்று கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜீலை 25ம் தேதி முடிவடையும்.

இந்த ஆண்டு மருத்தவம், பல் மருத்துவம், பொறியியக்ம் வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் படிப்பு கட்டணச் செலவை அரசே ஏற்கும். விண்ணப்பதாரரின் தாய், தந்தை, பெற்றோரின் பெற்றோர், உடன் பிறந்தோர் பட்டதாரியாக இல்லாமல் இருந்தால் இந்தச் சலுகை கிடைக்கும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பலகலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் அரசு செலுத்தி விடும்.

இந்த சலுகையை பெற வேண்டுமெனில் தங்கள் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இல்லை என்ற சான்றிதழை தங்களது பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு குறையாத அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்.

பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் பட்டதாரிகள் இருக்க மாட்டார்கள். அதனால் இந்த கட்டணச் சலுகை முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு பலன் தரும் என்பதே உண்மை. இந்தச் சலுகையை முஸ்லிம் மாணவ, மாணவியர் ஒழுங்கான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment